பயணியர் விமானங்களை குறிவைத்து  சைபர் தாக்குதல்; பாக்., ஆதரவுடன் அரங்கேறுவது அம்பலம்

1


புதுடில்லி: நம் நாட்டு பயணியர் விமானப் போக்குவரத்துத் துறையைக் குறிவைத்து பாகிஸ்தானில் இருந்து சைபர் தாக்குதல் நடத்துவது அம்பலம் ஆகியுள்ளது .

விமானங்களின் வழிகாட்டி அமைப்புகளான நேவிகேஷன் சிஸ்டத்திற்குப் போலியான சிக்னல்களை அனுப்பி, விமானம் இருக்கும் இடம், அதன் வேகம், பறக்கும் உயரம் மற்றும் நேரம் ஆகியவற்றை முற்றிலும் தவறாகக் காட்டி திசைதிருப்பும் அதி உயர் தொழில்நுட்பச் சதி, 'ஜி.பி.எஸ்., ஸ்பூபிங்' எனப்படுகிறது.

இதுவும் ஒருவகை சைபர் தாக்குதல் தான். வழக்கமான 'ஜி.பி.எஸ்., ஜாமிங்' என்பது சிக்னல்களை முற்றிலும் முடக்குவது மட்டுமே. ஆனால், இந்த 'ஸ்பூபிங்' தொழில்நுட்பம் என்பது தவறாக வழிகாட்டும் சிக்னல்களை உண்மையானது போலவே சித்தரிக்கும் ஒரு ஆபத்தான சதி.

விமானப் போக்குவரத்தில் இது பாதுகாப்பு அபாயங்களை உருவாக்குவதுடன், சர்வதேச அளவில் நம் நாட்டின் நற்பெயரைக் கெடுக்கவும், விமானிகளின் விழிப்புணர்வைக் குலைக்கவும் வழிவகுக்கும் என்பதால் இது மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இத்தகைய ஆபத்தான சைபர் தாக்குதல்களுக்கான தளங்கள் நம் நாட்டின் அண்டை நாடுகளில் இருந்து திட்டமிட்டு இயக்கப்படுவது மத்திய புலனாய்வு மற்றும் சைபர் பாதுகாப்பு அமைப்புகளின் முதற்கட்ட ஆய்வில் தற்பொழுது தெரியவந்துள்ளது.

இது குறித்து சைபர் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகள் ஊடகங்களுக்கு பகிர்ந்த தகவல்: நம் வான்வெளியில் சமீபகாலமாக ஜி.பி.எஸ்., சிக்னல் குழப்ப சம்பவங்கள் வரலாறு காணாத வகையில் 240 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன. இது தொடர்பாக பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 2023 நவம்பர் முதல் 2025 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 2,354 ஜி.பி.எஸ்., சிக்னல் குழப்ப சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

ஆனால், நடப்பு ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே இந்த எண்ணிக்கை 623 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறித்து தற்போது விரிவான விசாரணைகள் மற்றும் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவை இணைந்து, இது போன்ற சிக்னல் கோளாறுகளை எதிர்கொள்வதற்கான அவசரகால வழிமுறைகளை விமானிகளுக்கு வழங்கியுள்ளன.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில், பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற சைபர் குற்றப்பின்னணி கும்பல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விண்வெளி சார்ந்த நெட்வொர்க்குகளைத் தாக்கி அழிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இந்த சர்வதேச கும்பல், பாகிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளைத் தங்களின் தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகிறது. முக்கிய வான்வழிப் பாதைகளில் பயணிக்கும் பயணியர் விமானங்களே இவர்களின் முதன்மை இலக்காக உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement