கியூபா வீரர் உலக சாதனை: தொடர்ச்சியாக 5 தங்கம் வென்றார்

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் கியூபாவின் மிஜைன் போபஸ் நுனேஸ், தொடர்ச்சியாக 5 தங்கம் வென்று உலக சாதனை படைத்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 'கிரிகோ-ரோமன்' 130 கிலோ எடைப்பிரிவு பைனலில் கியூபாவின் மிஜைன் போபஸ் நுனேஸ் 41, சிலியின் யஸ்மானி அகோஸ்டா மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மிஜைன் போபஸ், 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தொடர்ச்சியாக 5 தங்கம் கைப்பற்றி புதிய உலக சாதனை படைத்தார். கடந்த 2004ல் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அறிமுகமான மிஜைன் லோபஸ் காலிறுதியோடு திரும்பினார். அதன்பின் 2008, 2012, 2016, 2020ல் தங்கம் வென்றிருந்தார். இதற்கு முன் அமெரிக்க நீச்சல் ஜாம்பவான் மைக்கேல் பெல்ப்ஸ், தடகள வீரர் கார்ல் லுாயிஸ், நீச்சல் வீராங்கனை கேட்டி லெடிக்கி உள்ளிட்ட 6 பேர் தொடர்ச்சியாக தலா 4 தங்கம் (தனிநபர்) வென்றிருந்தனர். தவிர இவர், ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்ற முதல் மல்யுத்த நட்சத்திரமானார். ஆறு முறை (2004-2024) ஒலிம்பிக்கில் பங்கேற்ற மிஜைன் போபஸ், 2004ல் நடந்த காலிறுதியில் தோல்வியை தழுவினார். அதன்பின் ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக 22 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.


லெடிக்கிக்கு வாய்ப்பு: கடந்த 4 ஒலிம்பிக்கில் (2012, 2016, 2020, 2024) நீச்சல் போட்டிக்கான 800 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடிக்கி, 2028ல் நடக்கவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் அசத்தினால், கியூபா வீரரின் சாதனையை சமன் செய்யலாம்.



வரலாறு படைத்தது ஆஸி.,


பிரான்சில் நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய நட்சத்திரங்கள் அசத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 4 தங்கம், 2 வெண்கலம் கைப்பற்றினர். பதக்கப்பட்டியலில் 18 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா. இதன்மூலம் ஒரு ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன் டோக்கியோ (2020), ஏதென்ஸ் (2004) ஒலிம்பிக்கில் தலா 17 தங்கம் வென்றது ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச தங்கமாக இருந்தது.

Advertisement