கட்டட அனுமதி பணிகள்: உள்ளாட்சிகள் திணறல்

1

சென்னை: கட்டுமான திட்ட அனுமதி விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, ஒப்பந்த பொறியாளர்களை நியமிப்பது தொடர்பாக, எந்த முடிவும் எடுக்கப்படாததால், உள்ளாட்சி அமைப்புகள் திணறுகின்றன.


தமிழகத்தில், 10,000 சதுரடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி வழங்கலாம். இதற்கான அதிகாரம் சட்டப்பூர்வமாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

ஆட்கள் குறைவு



இதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பணியாளர் பற்றாக்குறை இருந்தாலும், திட்ட அனுமதி வழங்கும் பணிக்கு, தங்களுக்கு தேவையான பொறியாளர்களை பயன்படுத்தி வருகின்றன. ஆனால், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் துறை ரீதியாக நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால், பிரச்னை ஏற்படுகிறது.



ஒப்பந்த அடிப்படை யில், பொறியாளர்களை நியமிக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பரிந்துரைத்தாலும், ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகள் அனுமதிக்காததால், சிக்கலாகி உள்ளது.


இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: ஊராட்சிகளில் கட்டட அனுமதி பணிக்கு, வெளியில் இருந்து பொறியாளர்களை நியமிக்க வேண்டும். இதில், சென்னை பெருநகரில், 140 பொறியாளர்களை தேர்வு செய்து, சி.எம்.டி.ஏ., பரிந்துரைத்தது.

இவர்களை பயன்படுத்துவது குறித்து, உள்ளாட்சிகள் முடிவு எடுக்காமல் தாமதித்து வருகின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஊராட்சிகள், பேரூராட்சிகளில் பொறியாளர்களை நியமிப்பதில் குழப்பம் நிலவுகிறது.

முட்டுக்கட்டை



ஊரக வளர்ச்சி துறை மேலதிகாரிகள், இதற்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுவது சரியல்ல. உள்ளாட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் ரீதியாக இதில் லாபம் பார்க்க முயல்கின்றனர். தங்கள் விருப்பப்படி செயல்படும் பொறியாளர்களை நியமிக்க முயற்சிக்கின்றனர்.

தகுதியான பொறியாளர்களை நியமிக்க வேண்டும் என்பதை விடுத்து, தங்கள் சொல்படி நடக்கும் பொறியாளர்களை உள்ளாட்சிகள் நியமித்தால், அது பல்வேறு புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement