சோளிங்கர் ரோப்காரில் பயணிக்க பக்தர்கள் காத்திருப்பு

சோளிங்கர், : ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் மலைக்கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். 1,305 படிகள் கொண்ட இந்த மலைக் கோவிலுக்கு கடந்த மார்ச் மாதம், ரோப்கார் சேவை துவங்கப்பட்டது.

இந்த சேவை வாயிலாக, தினசரி 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணித்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். புரட்டாசி மாதத்தை ஒட்டி தற்போது வார இறுதி நாட்களில் ரோப் கார் சேவை, காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.

இதனால் கூடுதலான பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ரோப் காரில் பயணிக்க பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.

ஒரே நேரத்தில் 16 பேர் கீழே இருந்து மேலே மலைக்கோவிலுக்கும், மலைக்கோவிலிலிருந்து 16 பேர் அடிவாரத்திற்கும் பயணிக்கும் வசதி உள்ளது.

இதன் வாயிலாக பக்தர்கள் எளிதாக மலைக்கோவிலில் சுவாமியை தரிசிக்க முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement