பழமையான விமான படைத்தளங்களை புதுப்பித்து பயன்படுத்த திட்டம்

கோவை,: தமிழ்நாட்டில் உள்ள பழமையான விமான படை தளங்களை, டிட்கோ உதவியுடன் புதுப்பித்து பயன்படுத்த, விமான தர நிர்ணய அமைவனம் (டி.ஜி.ஏ.க்யூ.ஏ) திட்டமிட்டு வருகிறது. சூலுாரில் விமான பழுதுபார்ப்பு, பராமரிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது, என, இந்திய விமானப்படை தர உறுதி இயக்குனரகத்தின் (டி.ஜி.ஏ.க்யு.ஏ) தலைவர் சஞ்சய் சாவ்லா தெரிவித்தார்.

நிருபர்களிடம், சஞ்சய் சாவ்லா கூறியதாவது:



சூலுார் விமான படைதளத்தை இந்திய விமானங்கள், ஹெலிகாப்டர்களை பழுதுபார்க்கும், பராமரிக்கும் தளமாகவும் மாற்ற உள்ளோம். அங்கு இதற்கென ஒரு அலுவலகம் துவக்க உள்ளோம். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (டிட்கோ),இதற்கான இடத்தை வழங்குகிறது.


தமிழகத்தில் சோழவரம், உளுந்துார்பேட்டை உள்ளிட்ட, ஆங்கிலேயர் காலத்தில் இருந்த, நான்கு விமானப்படை ஓடுதளங்களை சீரமைத்து, ஓரிரு வாரங்களில் பயன்படுத்த உள்ளோம். எதிர்காலத்தில் டிரோன்களின் பயிற்சிக்கு இவை பயன்படும்.


பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் உதவும். கோவையில் உள்ள மேக் கன்ட்ரோல் நிறுவனத்திற்கு பரிசோதனைகளை மேற்கொள்ள அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் சான்றுகளை அளிக்கும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். இதனால், 1 முதல் 4 சதவீதம் வரை, ஏற்றுமதி பொருட்கள் மீதான விலை மிச்சமாகும். சர்வதேச அளவில் போட்டிகளை எதிர்கொள்ள முடியும். இந்திய அரசின் மேக் இன் இந்தியா கொள்கைக்கு பங்களிப்பாக இருக்கும்.


ராணுவ தளவாட ஏற்றுமதியில், ஒவ்வொரு ஆண்டும் சாதனைகளை முறியடித்து வருகிறோம். கடந்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உற்பத்தியும், ரூ.15 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதியும் செய்துள்ளோம்.



வரும் ஆண்டில் ரூ.25 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் கட்டமைப்பு வசதிகள், வருங்காலத்தில் ஏற்றுமதியை உயர்த்த வழிவகுக்கும்.


பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், ஏற்றுமதி ஆர்டர்களை பெற்றுத்தந்துள்ளன. எகிப்து, நம் நாட்டின் விமான தளவாடங்களில் ஆர்வம் காட்டி வருகிறது. பிற நாடுகளுக்கு இணையான நமது தொழில் நிறுவனங்களும், தேவையான அளவுக்கு உயர்ந்துள்ளன. எதிர்காலத்திற்கு ஏற்ப, சட்டப்படியான வரையறைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான ராணுவ மறுசீரைமப்பு சட்டமும் இயற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement