கதர் வாரிய அதிகாரி சிறைபிடிப்பு புதுச்சேரியில் திடீர் பரபரப்பு

புதுச்சேரி : பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கதர் மற்றும் கிராம வாரிய அதிகாரியை, ஊழியர்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி கதர் மற்றும் கிராம வாரியத்தில் 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு காரணமான தலைமை செயல் அலுவலர் நரேந்திரனை கண்டித்தும், கதர் வாரிய உற்பத்தி கூடங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் வாங்காதது மற்றும் நிலுவை ஊதியம் வழங்காதது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுப் போராட்டக்குழுவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 3:15 மணிக்கு, சாரத்தில் உள்ள கதர் மற்றும் கிராம வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தலைமை செயல் அலுவலர் நரேந்திரனை அலுவலகத்தில் வைத்து பூட்டி சிறை பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த கோரிமேடு போலீசார் விரைந்து சென்று, போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்து, இரவு 7:00 மணிக்கு அதிகாரியை மீட்டு, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement