மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்; போராக மாறும் அபாயம்: எச்சரிக்கிறார் ஜெய்சங்கர்

1

புதுடில்லி: 'மத்திய கிழக்கில் நிலவும் மோதல், பெரிய போராக மாறும் அபாயம் உள்ளது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அமெரிக்கா, வாஷிங்டனில் நடந்த கலந்துரையாடலில் ஜெய்சங்கர் பேசியதாவது: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றம் முழு அளவிலான போராக மாறும் அபாயம் உள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும்.


மத்தியஸ்தம்




இந்தியா இந்த விவகாரத்தில் விவாதங்கள் மற்றும் மத்தியஸ்தம் செய்ய முடியும். இக்கட்டான காலங்களில் தகவல் தொடர்புகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். லெபனானில் நடந்தது மட்டுமல்ல, செங்கடல் மற்றும் ஈரான், இஸ்ரேலுக்கு இடையே நடக்கும் மோதல்கள் பெரியதாக மாறி வருவது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.


மக்களுக்கு தீங்கு




கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி நடந்த மோதல், பயங்கரவாத தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம். இஸ்ரேல் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் எந்தவொரு நாடும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு இணங்க வேண்டும். பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் செயல்படுவது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.




ஈரான் செல்லாதீர்கள்!




இதற்கிடையே, 'அத்தியாவசிய தேவையின்றி ஈரான் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்; ஈரானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என மத்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement