இதுதான் சேவை லட்சணமா; விமான நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது நுகர்வோர் கோர்ட்

1


புதுடில்லி: பயணியின் உடைமையை உரிய நேரத்தில் திருப்பி தராமல், சேவையில் குறைபாடு காட்டியதற்காக எடிஹாட் விமான நிறுவனத்திற்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஆஷா தேவி என்ற பெண், எடிஹாட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் 2016ம் ஆண்டு ஜூன் 1 ல் சுவீடனில் இருந்து டில்லி வந்துள்ளார். வழியில் பெர்லின் விமான நிலையத்தில், அவரது டிக்கெட் பிசினஸ் வகுப்புக்கு மாற்றப்பட்டு உடைமைகள் வேறு இடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டன. பிறகு அவர் டில்லி திரும்பியதும் உடைமைகள் திருப்பி கொடுக்கப்படவில்லை. பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அவர் இது குறித்து புகார் அளித்த பிறகே உடைமைகள் திருப்பி கொடுக்கப்பட்டன. ஆனால், பையில் இருந்த ரூ.30 லட்சம்பணம், 30 கிராம் எடை கொண்ட தங்கச்சங்கிலி, மொபைல் போன் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவை அதில் இல்லை என ஆஷாதேவி குற்றம்சாட்டினார். இது குறித்து எடிஹாட் விமான நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து ஆஷாதேவி, டில்லியில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையின் போது, ஆஷாதேவியின் குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது என பதிலளித்த எடிஹாட் நிறுவனம், உடைமைகளை மாற்றியது குறித்து ஏர் பெர்லின் நிறுவனத்தை தான் அவர் அணுகியிருக்க வேண்டும் எனக்கூறியது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட ஆணையம், மனுதாரரின் உடைமைகள் சரியாக கையாளப்படவில்லை. அவர் அளித்த முகவரிக்கு தாமதமாகவே திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளது. இது எடிஹாட் நிறுவனத்தின் சேவை குறைபாடு ஆகும். இதற்காக மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.25 ஆயிரமும் என மொத்தம் ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், பணம், தங்க நகைகள் குறித்து விமான நிலையத்தில் அவர் முறையாக அறிவிக்காததால், அவரது குற்றச்சாட்டை ஏற்க முடியாது என தெரிவித்தது.

Advertisement