'ஆசிரியருக்கு சம்பளம் வழங்காமல் அரசியல் ஆதாயம் தேட முயற்சி!'

1

சென்னை : ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணியாற்றும் 32,500 பேருக்கு சம்பளம் வழங்காமல் அரசியல் ஆதாயம் தேட தி.மு.க., அரசு முயற்சிப்பதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:



தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின் இயக்குனரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்த்திக்கும் கூட சம்பளம் வழங்கப்படவில்லை.

இத்திட்டத்திற்காக, 2024- - 25ம் கல்வியாண்டு முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 573 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்காததால் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கல்வித் துறைக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு விதிக்கும் நிபந்தனைகளும், பிடிவாதமும் நியாயமானதல்ல.

அதே நேரத்தில், மத்திய அரசின் நிதி வரவில்லை எனக்கூறி சம்பளம் வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது மனிதநேயமற்ற செயல். சம்பளம் வழங்காமல் அவர்களை தவிக்க விட்டிருப்பதை பார்க்கும்போது, இப்பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக, பெரிதுபடுத்தி அரசியல் லாபம் தேடவே, தமிழக அரசு முயற்சிப்பது உறுதியாகிறது.

பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால், கல்வித் துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்கான நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும். அதே நேரம், மத்திய அரசு நிதிக்காக காத்திருக்காமல், தமிழக அரசே அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement