ஹரியானாவில் யாருக்கு ஜெயம்? காலை 9மணி நிலவரப்படி 9.53% ஓட்டுப்பதிவு

சண்டிகர்; ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று (அக்.,05) காலை 7 மணிக்கு துவங்கி ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 9.53% ஓட்டுப்பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.



ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கின. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் துவங்கி உள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 9.53% ஓட்டுப்பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


களத்தில் பெண் வேட்பாளர்கள் 101 பேர் உள்பட 1,031 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். மொத்தம் 20,632 ஓட்டுச்சாவடிகளில் 2 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. காலை 7 மணிக்கு முன்னதாகவே, பல்வேறு தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் ஓட்டு போட காத்திருந்தனர். ஜாஜர் நகர், ஆதம்பூர் தொகுதியில் சில இடங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.


மத்திய அமைச்சரும், ஹரியானா மாஜி முதல்வருமான மனோகர் லால் கட்டார் கர்னலில் உள்ள பிரேம்நகர் ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வாக்காளர்கள் அனைவரும் தவறாது ஓட்டு போட வேண்டும். ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.


நிச்சயம் பா.ஜ., அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும். 3வது முறையாக அரியணை ஏறும் என்று கூறினார். காங்கிரஸ் வேட்பாளர் ஆதித்யா சுர்ஜ்வாலா, கைதல் தொகுதியில் தமது ஓட்டை செலுத்தினார்.

Advertisement