குதிரையில் வந்த பா.ஜ., எம்.பி.,! ஹரியானா தேர்தலில் சுவாரஸ்யம்!

1

சண்டிகர்: ஹரியானாவில் பா.ஜ., எம்.பி., நவீன் ஜிண்டால், ஓட்டுப்பதிவு மையத்துக்கு வாக்களிக்க குதிரையில் வந்து, ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் ஏராளமான ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குருக்ஷேத்ரா தொகுதி பா.ஜ., எம்.பி., நவீன் ஜிண்டால் தமது தொகுதிக்குட்பட்ட ஓட்டுப்பதிவு மையம் ஒன்றில் ஓட்டுப்போட குதிரையில் வந்தார். தமது ஓட்டு செலுத்திய அவர் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது; மக்களிடையே பெரும் ஆர்வமும், எழுச்சியும் இருக்கிறது. காலை முதலே அவர்கள் அனைவரும் ஓட்டு போட்டு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஹரியானா மாநில மக்கள் நிச்சயம் பா.ஜ.,வை அரியணையில் அமர்த்துவார்கள். மக்களின் ஆசீர்வாதம் பா.ஜ.,வுக்கு உண்டு. நயப்சிங் சைனி ஹரியானா முதல்வராவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நவீன் ஜிண்டாலின் தாயாரும், நாட்டின் நம்பர் ஒன் பணக்கார பெண்மணியுமான சாவித்ரி ஜிண்டால் ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதே தொகுதியை சேர்ந்த அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான கமல் குப்தாவை எதிர்த்து களம் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement