நாங்க எப்பவோ ரெடி; வடகிழக்கு பருவமழை வரட்டும் என்கிறார் வருவாய்த்துறை அமைச்சர்!

23

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறி உள்ளார்.



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை கொட்டி வருகிறது. இந்த மழை வரும் 17ம் தேதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இந் நிலையில் சென்னையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆட்சியில் ஏற்பட்டதுபோல், மழை பாதிப்பு இம்முறை ஏற்படாது. பருவமழைக்கு முன்னரே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. பாதிக்கப்படும் பகுதிகளாக கருதப்படும் இடங்களில் முன்னதாகவே மீட்புக் குழுக்களை இம்முறை அனுப்ப திட்டமிட்டு உள்ளோம்.

அந்தந்த பகுதிகளிலேயே உணவு பொருட்கள், குழந்தைகளுக்கான பால் பவுடர் போன்றவற்றை முன் எச்சரிக்கையாக இருப்பு வைக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம். ஒரே இடத்தில் அதிக மழை பெய்வது குறித்து சம்பந்தப்பட்ட வானிலை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

Advertisement