ரூ. 30 லட்சம் முதலீடு செய்து ஏமாந்த ஜிப்மர் ஊழியர்
புதுச்சேரி: ஆன்லைன் வர்த்தகத்தில் ஜிப்மர் ஊழியர் 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, ஏமாந்தார்.
புதுச்சேரி, கோரிமேடு கலைவாணன் நகரை சேர்ந்த அனிதா; ஜிப்மர் ஊழியர். இவரது மொபைல் எண்ணை மர்மநபர் ஒருவர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றில், இணைத்தார்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால், உடனடியாக அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அந்த வாட்ஸ் அப் குரூப்பில் இருந்த பலரும் தான் முதலீடு செய்த பணத்தை விட கூடுதலாக பணம் கிடைத்துள்ளதாக தகவல் பதிவிட்டுள்ளனர்.
இதை நம்பிய அவர், தன்னிடம் இருந்த 30 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாயை பல தவணைகளாக வாட்ஸ் அப் குரூப்பில் தெரிவிக்கப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தினார். அவர் முதலீடு செய்த பணத்திற்கு லாப தொகையாக ரூ. 2 கோடியே 16 லட்சம் வரை கிடைத்துள்ளதாக, வாட்ஸ் அப் குரூப்பில் காட்டியது. பின், அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இது குறித்து சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.