முந்திரி வியாபாரி பண விவகாரம் போலீசார் தீவிர விசாரணை
புதுச்சேரி: புதுச்சேரி பஸ் நிலையத்தில் முந்திரி வியாபாரி பண விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி ஏ.எப்.டி., மைதானத்தில் இயங்கும் தற்காலிக பஸ் நிலையத்தில், 15 நாட்களுக்கு முன், உருளையன்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, கடலுார் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த முந்திரி வியாபாரி ஒருவர் போதையில் மயங்கி கிடந்தார். அவர் அருகில் பை ஒன்று இருந்தது. போலீசார் பையை சோதனை செய்ததில் அதில் கட்டுக்கட்டாக 22 லட்சம் ரூபாய் இருந்தது.
போலீசார் பணப்பையை மீட்டு, போதை நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர், சரியாக பதில் அளிக்கவில்லை. இதற்கிடையே போலீசாரிடம், புதுச்சேரியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர் போனில் பேசினார்.
அவர், அந்த பணம் பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரிக்கு சொந்தமானது. அவர், போதையில் உள்ளதால், பணத்தை தனது உதவியாளரிடம் கொடுக்கும்படி தெரிவித்தார். அதன்படி போலீசார் பணத்தை கொடுத்து அனுப்பினர்.
ஆனால், அதில் சில லட்சங்கள் குறைந்துள்ளது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.