கிருமாம்பாக்கத்தில் பராமரிப்பின்றி சிறுவர் விளையாட்டு பூங்கா

பாகூர்: கிருமாம்பாக்கத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் சிறுவர் விளையாட்டு பூங்காவை, சீரமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கிருமாம்பாக்கம் மந்தை வெளி திடலில், கடந்த காங்., ஆட்சியின் போது, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 87 லட்சம் ரூபாய் செலவில், இந்திரா காந்தி பெயரில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சிறியவர்கள், குழந்தைகள் விளையாடி மகிழ்ந்திடும் வகையில், ஏணி, ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதையும், ஓய்வு எடுக்க இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கிருமாம்பாக்கம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள், விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் பூங்காவிற்கு வந்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த சிறுவர் பூங்கா சரிவர பராமரிக்காததால், அதன் உள்ளே இருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கின்றன. மேலும், பூங்கா வளாகம் முழுதும் புதர் மண்டி கிடக்கிறது. அங்கு பாம்பு, தேள், போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால், சிறுவர் பூங்காவில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

எனவே, கிருமாம்பாக்கத்தில் பராமரிப்பின்றி உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement