தனிநபரின் வீட்டை இடித்த உத்தர பிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

2

புதுடில்லி : உத்தர பிரதேசத்தில் சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் தனிநபரின் வீட்டை இடித்த அம்மாநில அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. சட்டத்தை பின்பற்றும்படி உ.பி., அரசுக்கு அறிவுரை வழங்கிய நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.



உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் வீடுகள், புல்டோசர் வாயிலாக இடிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, சாலை அமைக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக, 2019ல் ஊடகங்களுக்கு ஒருவர் பேட்டி அளித்தார். இதையடுத்து, நெடுஞ்சாலையை ஆக்கிரமித்ததாகக் கூறி, எந்தவித முன்னறிவிப்புமின்றி அவரது வீட்டை அரசு இடித்து தள்ளியது.

பாதிக்கப்பட்ட நபர் உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தில், 2020ல் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சட்ட விரோதம்



இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உ.பி., அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரர் பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தார். அதனால், அவரது வீடு இடிக்கப்பட்டது. இது, பழி வாங்கும் நடவடிக்கை அல்ல' என்றார்.

இதன் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

எல்லை நிர்ணயத்தின் அடிப்படை அல்லது இடிக்கப்படும் அளவு குறித்து ஆக்கிரமிப்பாளருக்கு தெரியப்படுத்தவில்லை. மேலும், இது குறித்து எந்த நோட்டீசும் வழங்காமல் வீடு இடிக்கப்பட்டுள்ளது.

இதில், சட்ட நடைமுறைகளை உ.பி., அரசு பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. சாலை அமைப்பதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் தான், தன் வீடு இடிக்கப்பட்டதாக மனுதாரர் கூறுகிறார்.

உ.பி., அரசின் இத்தகைய நடவடிக்கையை ஏற்க முடியாது; இது சட்ட விரோதமானது. தனியார் சொத்துக்களை கையாளும் போது,​சட்டத்தை பின்பற்ற வேண்டும்.

மனுதாரர், 3.7 சதுர மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக உ.பி., அரசு கூறுகிறது. அதை ஏற்கிறோம்; அவருக்கு நாங்கள் நற்சான்றிதழ் கொடுக்கப் போவதில்லை.

ஆனால், சட்ட விதிகளை பின்பற்றாமல் அல்லது முறையாக நோட்டீஸ் வழங்காமல், எப்படி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து இடிக்க முடியும்? இதெல்லாம் என்ன நியாயம்?

குற்றவியல் நடவடிக்கை



இந்த விவகாரத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்கும்படி வலியுறுத்திய உ.பி., அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்த வழக்கில் அனைத்து சட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, பாதிக்கப்பட்ட நபருக்கு உ.பி., அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, மனுதாரரின் வீட்டை சட்ட விரோதமாக இடித்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை ஒரு மாதத்துக்குள், உ.பி., அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, இது போன்ற வழக்குகளில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்தார்.

அதில், சாலையின் அகலத்தை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்; ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்ப வேண்டும்; ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், முடிவு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நியாயமான கால அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

உத்தரவின் நகலை, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்ப, நீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.

Advertisement