இது கூட தெரியலை; சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார்: அமைச்சர் மா.சு., சுளீர்
கடலூர்: 'மருத்துவமனை முதல்வர் பணியிடம் நிரப்பவில்லை எனும் சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார். அரசியல் கட்சியை சேர்ந்த சீமான் இது கூட தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கடலூரில் நிருபர்கள் சந்திப்பில், மா. சுப்பிரமணியன் கூறியதாவது: காய்ச்சல் பாதிப்பு யாருக்கு ஏற்பட்டாலும், அருகில் உள்ள மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தில் 8,713 சுகாதார நிலையங்கள் இருக்கிறது. 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது.
தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, என மருத்துவ கட்டமைப்பு உள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் மருத்துவத் துறையில் 18,460 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 2,553 மருத்துவ பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
அப்டேட்டில் இல்லை!
மருத்துவமனை முதல்வர் பணியிடம் நிரப்பவில்லை எனும் சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார். அண்மையில் 20க்கும் மேற்பட்ட மருத்துவமனை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சியை சேர்ந்த சீமான் இது கூட தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
அப்டேட் அரசியல்வாதி என நினைத்துக் கொண்டிருந்தவர்கள், காலாவதியான அரசியல்வாதியாக மாறி உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மீது களங்கம் ஏற்படுத்த இ.பி.எஸ்., முயற்சி செய்கிறார். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.