ரூ.1.57 கோடி ஜி.எஸ்.டி., பாக்கி: பிரபல கேரள கோயிலுக்கு நோட்டீஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலுக்கு ஜி.எஸ்.டி., துறை அலுவலக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் வணிக நிறுவன கட்டடங்களின் மூலம் வாடகை, மற்றும் காப்பக கட்டணம், டிக்கெட் வசூல், புத்தகங்கள், துணிகள் விற்பனை, புகைப்படங்கள் விற்பனை, மற்றும் யானை ஊர்வலம், பவனி ஆகியன மூலம் கோடிக்கணக்கான வருவாய் வருகிறது.
இதில் சில வரிக்குட்பட்டது. சில வரிக்குட்பட்டு வராது. இருப்பினும் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி வரி ரூ.1.57 கோடி கட்டாமல் நிலுவையில் இருப்பதாக ஜி.எஸ்.டி துறையினர் நோட்டீஸ் அனுப்பி பணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர்.
இதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பதில் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஜிஎஸ்டி கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பதில் அனுப்பியுள்ளனர்.