நவ.4ல் மதுரை அரசு பஸ்கள் மூலம் ரூ.3.80 கோடி வருமானம்
மதுரை: தீபாவளியையொட்டி மதுரை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளில் அதிகளவாக ரூ.3.80 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, மதுரையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டன. அக்.,28 முதல் அக்.,30 வரை சென்னையில் இருந்து 355 பஸ்கள், மதுரையில் இருந்து பிறபகுதிகளுக்கு 360 பஸ்கள் இயக்கப்பட்டன.
பின்னர் தீபாவளி முடிந்து செல்ல நவ.,2 முதல் நவ.,4 வரை சென்னைக்கு 280, மதுரையில் இருந்து பிற இடங்களுக்கு 350 பஸ்கள் இயக்கப்பட்டன. இவை தவிர 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களையும் வாடகைக்குப் பெற்று சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டன.
இச்சிறப்பு ஏற்பாடுகளால் இந்தாண்டு பயணிகள் சிரமமின்றி பயணித்தனர். ஏராளமான பயணிகள் சென்று வந்ததால் கூடுதல் வருவாய் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள மதுரை மண்டலத்தில்
நவ.,4 மட்டும் ரூ.3 கோடியே 80 லட்சத்து 19 ஆயிரமும், திண்டுக்கல் மண்டலத்தில் ரூ. ஒரு கோடியே 61 லட்சத்து 60 ஆயிரமும் கிடைத்துள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்த அதிகபட்ச தொகை.
மேலாண்மை இயக்குனர் சிங்காரவேலு கூறுகையில், ''தீபாவளியையொட்டி பயணிகளின் வருகைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டதால் சிரமம் தவிர்க்கப்பட்டது. இதேபோல ஊழியர்கள் வரும் காலங்களிலும் பணியாற்றி அதிகபட்ச வருவாயை ஈட்டித் தரவேண்டும்'' எனக் கூறியுள்ளார்.