தீவிரவாதம் இல்லாத பாரதம்; மோடி அரசின் திட்டம்; அமித்ஷா உறுதி
புதுடில்லி: தீவிரவாதம் இல்லாத பாரதத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய புலனாய்வு முகமை சார்பில் தீவிரவாத ஒழிப்பு மாநாடு இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. தேசிய பாதுகாப்பிற்கு தீவிரவாதத்தால் எழும் அச்சுறுத்தல்கள் குறித்தும், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான வழக்கு விசாரணைகள், சர்வதேச சட்ட ஒத்துழைப்பு மற்றும் நுணுக்கங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளும், விவாதங்களும் நடத்தப்பட இருக்கிறது.
இந்த நிலையில், இந்த மாநாடு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொஞ்சம் சகிப்புத் தன்மை இல்லாமல், தீவிரவாதம் இல்லாத பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதியாக, தீவிரவாத ஒழிப்பு மாநாடு நடைபெறுவதாகவும் கூறியிருந்தார். மேலும், அனைத்து ஏஜென்சிகளின் உதவியுடன் நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.