தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,320 சரிவு

சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 1,320 ரூபாய் சரிவடைந்தது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த அக்டோபர் 30ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் சவரன், 59,520 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. பின், தங்கம் விலை சற்று குறைந்தது.

நேற்று முன்தினம் தங்கம் கிராம், 7,365 ரூபாய்க்கும்; சவரன், 58,920 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 105 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து, 7,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,320 ரூபாய் சரிவடைந்து, 57,600 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 102 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:

அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், அமெரிக்க பொருளாதாரத்தையும், தொழில் துறையையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

அதனால், வரும் காலங்களில் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்று கருதி, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தை தவிர்த்து, பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால், நம் நாட்டிலும் அதன் விலை சரிவடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement