கோடை விடுமுறை பெயரை மாற்றியது உச்ச நீதிமன்றம்
புதுடில்லி: கோடை விடுமுறை என்பதை, பகுதிநேர பணியாற்றும் நாட்கள் என, உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. மேலும், விடுமுறைகால நீதிபதிகள் என்பதை, நீதிபதிகள் என்றே அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்துக்கு கோடை காலம் மற்றும் குளிர்காலத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த காலத்தில் சில நீதிபதிகள் பணியாற்றுவர். நீதிபதிகள் அதிக விடுமுறை எடுத்துக் கொள்வதாக சமீப காலமாக விமர்சனங்கள் எழுந்தன.
'நீதிபதிகள் நீண்ட விடுமுறை எடுப்பதில்லை. வார இறுதியிலும் பல நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் என, பலவற்றிலும் பங்கேற்கிறோம்' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலர், வழக்கு விசாரணையின் போது குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், விடுமுறை தொடர்பாக உச்ச நீதிமன்ற விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது.
இதன்படி, கோடைகால விடுமுறை என்பது இனி, பகுதி நேர பணியாற்றும் காலம் என்று அழைக்கப்படும். மேலும், விடுமுறை கால நீதிபதிகள், நீதிபதிகள் என்றே அழைக்கப்படுவர் என்று கூறப்பட்டுஉள்ளது.
இந்த புதிய திருத்தத்தின்படி, ஆண்டுக்கு, ஞாயிற்றுக்கிழமைகள், பொது விடுமுறைகள் உள்பட, 95 நாட்கள் மட்டுமே விடுமுறையாக இருக்க வேண்டும். கோடை காலத்துக்கான பகுதிநேர பணியாற்றும் நாட்கள் உள்ளிட்டவற்றை, தலைமை நீதிபதியே நிர்ணயிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின், 2025ம் ஆண்டுக்கான காலண்டரில், அந்தாண்டின் மே, 26 முதல் ஜூலை 14ம் தேதி வரை, பகுதிநேர பணியாற்றும் நாட்களாக குறிப்பிடப்பட்டுஉள்ளது.