ராமமூர்த்தி ரோட்டில் மீண்டும் பள்ளம் ஓராண்டு கூட தாக்குப்பிடிக்காத சீரமைப்பு பணி
விருதுநகர்: விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் பாதாளசாக்கடை மேன்ஹோலுக்கு செல்லும் மெயின் குழாய் சேதமடைந்து கழிவுநீரால் மண் அரிப்பு 2023ல் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதை சீரமைத்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் தாக்குப்பிடிக்காமல் சீரமைத்த இடத்தில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் ராமமூர்த்தி ரோடு புதிதாக போட்டு மூன்றரை ஆண்டுகள் தான் ஆகிறது. 2023ல் நவ. 19ல் மாலை பெய்த கனமழையில் மண் அரிப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. நள்ளிரவு என்பதால் விபத்து ஏதும் ஏற்படவில்லை. அதிகாலையே நகராட்சி ஊழியர்கள் தடுப்பு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து அடுத்தடுத்த நாட்களில் சீரமைப்பு பணியை செய்தனர். 3 மாதங்கள் முன் தான் தார் கொட்டப்பட்டது. அதுவரை மண் போட்டு மூடியிருந்ததால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு இவ்வழியாக சென்ற கனரக வாகனத்தில் டயர் தடத்தின் எடை தாங்காமல் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் செய்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் தாக்குப்பிடிக்காமல் உள்ளது. தற்போது பேரிகார்டு வைத்து மறைத்துள்ளனர். அருகில் உள்ள தெருக்களை பயன்படுத்தி மக்கள் சென்று வருகின்றனர். ஆம்புலன்ஸ்கள் செல்ல சிரமப்பட்டு வருகிறது.
இந்த ரோடு கனரக வாகனங்கள் அதிகம் செல்வதற்கானது. அதற்கேற்ப தரத்தில் போடப்பட்டிருக்க வேண்டும். அல்லது பாதாளசாக்கடை கழிவுநீர் அரிப்பால் கடந்த ஆண்டு போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது என்றால் ஓராண்டு கூட தாக்குப்படிக்க முடியாத அளவுக்கு தான் பாதாளசாக்கடை சீரமைப்பு பணி நடந்துள்ளதா என்றும் தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.