முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வெற்றி வேல் வீரவேல் கோஷத்தில் சூரசம்ஹாரம் நடந்தது.

முருகன் கோயில்களில் நவ. 2 முதல் துவங்கிய கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை மேற்கொண்டனர். 6ம் நாளான நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலையில் யாக பூஜை, வேல் பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணி முதல் அம்மன் கோயில் திடலில் முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து பானக பூஜை, சிறப்பு பூஜை மண்டபத்தில் இருந்து சூரன் தடம் பார்த்து நகர்வலம் வருதல், பின்னர் நெய்வேத்ய பூஜை உள்ளிட்டவை நடந்தது.

*சாத்துார் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நேற்று மாலை 5:30 மணிக்கு நடந்தது.

முருகன் கோயில் நான்கு ரத வீதி வழியாக சுவாமியுடன் சூரன் வலம் வந்தனர். யானை முகம், சிங்கமுகம், அடுத்து மனித முகம், எடுத்த சூரன் முருகன் முன் தோன்ற முருகன் சுவாமி சூரனை சூரசம்ஹாரம் செய்தார்.

முன்னதாக முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சாத்துார் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் விழாவில் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

*வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இக்கோயிலில் நவ.2ல் கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், சஷ்டி பாராயணம் நடந்தது.

விழாவின் ஆறாம் நாளான நேற்று சூரசம்ஹாரம் முத்தாலம்மன் கோயில் திடலில் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை, விரதம் இருந்த பக்தர்கள் வெள்ள விநாயகர் கோயிலில் இருந்து பால் குடம், காவடி எடுத்து ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்தனர். அங்கு 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது.

மாலை 4:30 மணிக்குமேல் முத்தாலம்மன் திடலில் சூரசம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. பல்வேறு அவதாரம் எடுத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் வேல்வீசி அழித்தார். அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசித்தனர். பின்னர் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

Advertisement