நவ.15க்குள் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வேண்டுகோள்
ஆர்.எஸ்.மங்கலம்: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நவ.15க்குள் நெற்பயிருக்கு இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தி பயனடையுமாறு வேளாண் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல், மிளகாய், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் 2016 முதல் பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு இத்திட்டத்தில் இன்சூரன்ஸ் பதிவு செய்வதற்கு நவ.15 வரை விவசாயிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காப்பீடு செய்ய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., வழங்கும் சாகுபடிக்கான அடங்கலை பெற்று உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துமாறு ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.