ராமநாதபுர மாவட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
இன்று தெய்வானை திருக்கல்யாணம்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.2ல் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் முருகன் பல்வேறு அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று முன்தினம் இரவு சக்திவேல் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு முருகன் சக்தி வேலுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
அப்போது இரவு 7:00 மணிக்கு கோயில் முன்பு வைகை ஆற்றங்கரையில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
சூரபத்மன் கஜமுகம், சிங்கமுகன், அரக்க வடிவம் மற்றும் சேவல் வடிவெடுத்து வந்தார். அலை கடலென திரண்ட பக்தர்கள் மத்தியில் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதே போல் பாரதி நகர் மற்றும் பால்பண்ணை முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு தெய்வானை, முருகன் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
*திருப்புல்லாணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகை அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் உள்ளிட்ட பஜனை, பக்தி பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 4:30 மணிக்கு திருப்புல்லாணியில் நான்கு ரத வீதிகளிலும் உற்ஸவர் பாலசுப்பிரமணிய சுவாமி உலா வந்தார்.
பின்னர் கோயில் முன்புறமுள்ள திடலில் முருகப்பெருமான் வேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கினர்.
இன்று காலை 10:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்ஸவம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
*முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுார் கிராமத்தில் குமரக்கடவுள் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா சிறப்பு பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், மங்கள இசை வாத்தியத்துடன் துவங்கியது.
பின்பு பரம்பரை அறங்காவலர் ஆனந்த நடராஜன், சிவாச்சாரியார் நவநீதகிருஷ்ணன் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கும்ப ஆலயம் வலம் வந்து முருகனுக்கு பால், சந்தனம், மஞ்சள் திரவிய பொடி உட்பட 33 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் கமுதி, பரமக்குடி, முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலரும் கலந்து கொண்டனர். இதே போன்று கமுதி, முதுகுளத்துார் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழா நவ.2ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று வள்ளி, தெய்வானையுடன் முருகன் வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
முன்னதாக சந்தனம், பால், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற வகையான அபிேஷகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். கந்தசஷ்டி கவசம் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.