பெருமாள் கோயிலில் நாக சதுர்த்தி விழா

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள கோயில்களில் நாகசதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது.

ஐப்பசி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் நாகசதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் நாகங்களை தெய்வங்களாக வழிபடும் நாள் நாக சதுர்த்தி. அப்போது நாக தோஷம் நீங்க நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாக சதுர்த்தியை ஒட்டி பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு கோயிலில் சிறப்பு பஜனை நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் கருட வாகனத்தில் அலங்காரமாகினார்.

தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்த பெருமாளுக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.

பரமக்குடி காக்கா தோப்பு நாகர் மேட்டில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் அபிஷேகம் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Advertisement