சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்கு எங்கும் ஆவணப்படுத்தவில்லை: கவர்னர் ரவி

சென்னை:''சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்கு இன்றியமையாதது. ஆனால், அது குறித்து எங்கும் ஆவணப்படுத்தப்படவில்லை,'' என, கவர்னர் ரவி பேசினார்.

சென்னை, கவர்னர் மாளிகையில் நடந்த, பழங்குடியினர் பெருமை தினம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் உருவான தினவிழாவில், கவர்னர் பேசியதாவது:

பழங்குடியினர் பெருமை தினம் கொண்டாடி வருகிறோம். ஆனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி முழுதுமாகக் கிடைக்கவில்லை. நாட்டின் மக்கள் தொகையில் அவர்கள் எட்டு சதவீதம் பேர் உள்ளனர். இருப்பினும், பெரும்பாலானோர் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர்.

ஓட்டு வங்கி அரசியலில், இவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

நம் மாநிலத்திலும் பழங்குடியின மக்கள் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் உள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான், ஆதார், வங்கி வசதிகள் என, எந்த சலுகைகளும் கிடைக்காமல், அவர்கள் உள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல இடங்களிலும் இந்நிலை இருப்பது வேதனை அளிக்கிறது. பாரதம் வளர்ச்சியடைய, நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும். அனைவரும் சமம் என, அரசியலமைப்பு சொல்கிறது. ஆனால், பழங்குடியின மக்களில் பலர் வளரவில்லையே ஏன்?

பிரதமர் மோடி, இவர்களை ஒரே குடும்பமாக பார்த்தார். அதனால்தான் கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, நிதி என பல வளர்ச்சி திட்டங்கள், இன்று அனைவருக்கும் கிடைக்கின்றன.

சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்கு இன்றியமையாதது. ஆனால், அது குறித்து எங்கும் ஆவணப்படுத்தப்படவில்லை; தற்போதுதான் அப்பணி நடந்து வருகிறது.

தமிழகத்திலும் ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, நீலகிரி என பல இடங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில், மொபைல் போன் டவர், சாலை வசதிகளை் மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நீலகிரி ஆதிவாசி நலச்சங்க செயலர் அல்வாஸ், ஜார்க்கண்ட் பிரதிநிதி ராணாசிங், கிராம வளர்ச்சி சங்க செயலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement