ரூ.84 கோடி மதிப்புள்ள 1,400 பழங்கால கலைப்பொருட்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு

2

நியூயார்க்: 84 கோடி ரூபாய் மதிப்புடைய கொள்ளையடிக்கப்பட்ட 1,400க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்களை, அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணை துாதரகத்தில் முறைப்படி இவை திரும்ப ஒப்படைக்கப்பட்டன.


இது குறித்து, அமெரிக்க வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்களை திருப்பி அனுப்புவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளோம் என்றது.


மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நான்சி வீனர் மற்றும் சுபாஷ் கபூர் ஆகியோரால் நடத்தப்பட்ட கொள்ளைகள் மீதான தொடர்ந்து நடந்த பல விசாரணைகளின் விளைவாக, இந்த கலைப்பொருட்கள் கண்டிபிடிக்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜூலை மாதம், அமெரிக்காவும், இந்தியாவும் சட்டவிரோத வர்த்தகங்களைத் தடுப்பதன் மூலம் கலாசார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

கடந்த செப்டம்பர் மாதம் திருடப்பட்ட 297 பழங்கால பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி அளித்துள்ளது.

இந்த பழங்காலப் பொருட்கள் கிமு 2000 முதல் கிபி 1900 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை. பெரும்பாலான பழங்கால பொருட்கள் டெரகோட்டா கலைப்பொருட்கள். மற்றவை கல், உலோகம், மரம் மற்றும் தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்டவை.


பிரதமர் மோடி அமெரிக்கா வருகையின் போது 10 பழங்கால பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. 2021 செப்டம்பரில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தின் போது 157 பழங்காலப் பொருட்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரது விஜயத்தின் போது மேலும் 105 தொல் பொருட்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன,
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement