சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர்சிங் பாதல் ராஜினாமா
சண்டிகா்: சிரோமணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி) கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல்,(62) தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகனான சுக்பீர் சிங், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், 2009 ஆகஸ்ட் முதல் 2017 -மார்ச் வரை, இரண்டு முறை பஞ்சாப் துணை முதல்வராகவும் இருந்தார்.
ராஜினாமா குறித்து மாஜி அமைச்சர் தல்ஜித் சீமா அறிக்கையில் கூறியதாவது:
சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்து புதிய தலைவரை தேர்வு செய்ய வழி வகுத்தார்.
சுக்பீர் சிங் பாதல் இன்று கட்சியின் செயற்குழுவில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க, கட்சியின் தேர்தல் நடக்க வழி வகை செய்துள்ளார்.
மேலும் தனது தலைமையின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காகவும், பதவிக்காலம் முழுவதும் முழு மனதுடன் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியதற்காகவும் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பாதலின் ராஜினாமாவை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய, அகாலிதளத்தின் செயற்குழுத் தலைவர் பல்விந்தர் சிங் புந்தர், சண்டிகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வரும் திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு செயற்குழுவின் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அகாலிதளத்தின் தலைவர், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு தேர்தல் டிசம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமா கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 30ந் தேதி, 'அகால் தக்த்' அமைப்பு சுக்பீர் சிங் பாதலை மத ரீதியாக குற்றமிழைத்தவர் என்று அறிவித்த நிலையில், அவருக்கான மத ரீதியான தண்டனை இன்னும் அறிவிக்கப்பட வில்லை. இந்த சூழலில், சுக்பீர் சிங் பாதல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.