தேர்தல் விதிமீறல் புகார்: நட்டா, கார்கேவிடம் விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்
புதுடில்லி: மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இரு கட்சியினரும் பரஸ்பர புகார் அளித்துள்ள நிலையில், ஜேபி நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தேர்தல் ஆணையம் இன்று விளக்கம் கோரியுள்ளது.
காங்கிரஸ் புகார்
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் செய்தபோது பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் விதி மீறியதாக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.
மராத்தி மொழி தொலைக்காட்சித் தொடர்களில் மகாயுதி பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்கள் வைக்கப்படுவதாகவும், சீரியலில் குறிப்பிட்ட காட்சிக்குப் பிறகு சிவசேனாவின் பிரசார முழக்கம் அடங்கிய விளம்பரங்களை மராத்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று நேற்று முதல் ஒளிபரப்பி வருகிறது. இது பற்றியும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., புகார்
சில முஸ்லிம் அமைப்புகள் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல் சூழலை சீர்குலைக்க முயற்சிப்பதாக பா.ஜ., குற்றம் சாட்டியது.
இரு தரப்பினரிடமும் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு பா.ஜ., தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளர்கள் மாதிரி நடத்தை விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகார்கள் பற்றி விளக்கம் அளிக்கும்படி கார்கேவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விதி மீறல்களுக்கான விளக்கத்தை நவம்பர் 18, 2024 திங்கட்கிழமை மதியம் 1 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இரு கட்சித் தலைவர்களிடமும் கோரியுள்ளோம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.