எலி மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து 'சீல்'
சென்னை, நவ. 17குன்றத்துாரில் இரு குழந்தைகள் இறப்புக்கு காரணமான, 'யூனிக் பெஸ்ட் கன்ட்ரோல்' நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அதன் அலுவலகத்திற்கும் வேளாண் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர்.
குன்றத்துார் அருகே, மணஞ்சேரியை சேர்ந்தவர் கிரிதரன், 34. அவரது வீட்டில், எலி தொல்லை அதிகமாக இருந்ததால், 'யூனிக் பொஸ்ட் கன்ட்ரோல்' என்ற தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அந்நிறுவன ஊழியர்கள், வீட்டில் எலிகளை ஒழிக்க மருந்துகளை வைத்து சென்றனர்.
கிரிதரன் குடும்பத்துடன் வீட்டிலேயே துாங்கினார். மருந்தின் நெடி தாங்காமல், அவரது குழந்தைகள் விஷாலினி, சாய் சுதர்சன் ஆகியோர் உயிரிழந்தனர். கிரிதரன் மற்றும் அவரது மனைவி பவித்ரா, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இரு குழந்தைகள் இறப்புக்கு காரணமான நிறுவனத்தின் மீது, வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன், தி.நகர் தாமோதரன் தெருவில் செயல்பட்டு வந்த, அந்நிறுவனத்திற்கு, அம்பத்துார் வேளாண் துறை உதவி இயக்குனர் அமுதகுமாரி தலைமையில் அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
அமுதகுமாரி கூறியதாவது:
எலிகளை கட்டுப்படுத்துவதில், அந்நிறுவனம் உரிய வழிக்காட்டுதல்களை தான் பின்பற்றியுள்ளது. அதேநேரம், இம்மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகளை, வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். மருந்து வைக்கப்பட்டபின், வீட்டில் யாரும் தங்க வேண்டாம் என, அறிவுறுத்த வேண்டியது அவசியம். இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதால், அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து, அலுவலகத்திற்கும் சீல் வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.