கங்குவா நாயகி தந்தையிடம் ரூ.25 லட்சம் மோசடி
லக்னோ : நடிகை திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானியிடம், அரசில் உயர்பதவி வாங்கி தருவதாக கூறி, 25 லட்சம் ரூபாய் ஏமாற்றிய மர்ம நபர்களை உத்தர பிரதேச போலீசார் தேடி வருகின்றனர்.
தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகை திஷா பதானி. சமீபத்தில் வெளியான கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இவரது குடும்பம், உத்தர பிரதேத்தின் பரேலியில் வசித்து வருகிறது.
போலீசில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய இவரது தந்தை ஜெகதீஷ் சிங் பதானி, சமீபத்தில் ஓய்வுபெற்றார்.
கடந்த ஜூலையில் இவரை தொடர்பு கொண்ட ஐந்து பேர், அரசு ஆணையத்தில் தலைவர் அல்லது துணை தலைவர் பதவி வாங்கி தருவதாக ஜெகதீஷுக்கு ஆசை காட்டினார்.
அரசியல் அளவிலும், அரசு துறையிலும் தங்களுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக காட்டிக்கொண்ட மர்ம நபர்கள், உயர் பதவி பெற்றுத்தர அவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை பெற்றனர்.
முதலில், 5 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ள 20 லட்சம் ரூபாய் வெவ்வேறு வங்கி கணக்குகள் வாயிலாகவும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து, பணம் வாங்கிய நபர்களிடம் ஜெகதீஷ் கேட்டபோது, அவ்வப்போது மழுப்பலாக பதிலளித்து வந்தனர்.
மூன்று மாதங்களாகியும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், பணத்தை திருப்பித் தரும்படி, அவர்களிடம் ஜெகதீஷ் கேட்டுள்ளார். அதற்கு மறுத்த அவர்கள், கொலை மிரட்டல் விடுத்தனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ், இதுகுறித்து போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த கோட்டாலி போலீசார், பரேலியைச் சேர்ந்த சிவேந்திர பிரதாப் சிங் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.