ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.4,000 கோடி ஊழல்; ஜார்க்கண்ட் அரசு மீது ஜே.பி., நட்டா குற்றச்சாட்டு
போகாரோ: ஜார்க்கண்டில் கனிமவளம், நீர் மேலாண்மை திட்டங்களில் முதல்வர் ஹேமந்த் சோரனின் அரசு பல ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி., நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
போகாரோ மாவட்டத்தில் உள்ள கோமியா பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஜே.பி., நட்டா கூறியதாவது: உளவுத்துறையின் அறிக்கை எனக்கு கிடைத்துள்ளது. அதில், ஜார்க்கண்டில் உள்ள மதராசாக்களில் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, கேஸ் இணைப்பு, ரேஷன் கார்டு மற்றும் நிலம் உள்ளிட்டவற்றை ஹேமந்த் சோரன் அரசு வழங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜார்க்கண்டில் உள்ள ஜல், ஜங்கிள், ஜமீன் (நீர், வனம், நிலம்) ஆகியவற்றை ஹேமந்த் சோரன் கொள்ளையடிக்கிறார். ஜாமினில் வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன் மீண்டும் சிறைக்கு செல்வது உறுதி. கனிமவளத்தில் ரூ.5,000 கோடி அளவுக்கும், கிராமப்புற வீட்டுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் ரூ.4,000 கோடி அளவில் ஊழலும், ரூ.236 கோடியில் நிலம் மோசடியும் நடந்துள்ளது.
சட்ட விரோத ஊடுருவல்காரர்கள், பழங்குடியின மக்களை திருமணம் செய்து, அவர்களின் நிலங்களை பறித்துக் கொள்கின்றனர். இவற்றை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.,வால் மட்டுமே முடியும். இதனை தடுக்க சட்டசபையில் சட்டம் கொண்டு வருவோம்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை ஊழல்களின் குடும்பமாகும். இண்டி., கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று ஜெயிலில் இருப்பார்கள், இல்லையென்றால், பெயிலில் இருப்பார்கள் எனக் கூறினார்.