வரமாக வருவாரா ராகுல்: ஆஸி., டெஸ்ட் ஜுரம் ஆரம்பம்

பெர்த்: பெர்த் டெஸ்ட் போட்டிக்கு தரமான துவக்க வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தவிக்கிறது. அனுபவ ரோகித் சர்மா, சுப்மன் கில் விலகினர். காயத்தில் இருந்து ராகுல் மீண்டது நம்பிக்கை அளிக்கிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 'பார்டர்- - கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், பெர்த்தில் உள்ள புதிய ஆப்டஸ் மைதானத்தில் நவ. 22ல் துவங்குகிறது.


சுப்மன் நீக்கம்: இதற்காக பயிற்சியாளர் காம்பிர் கண்காணிப்பில் இந்திய அணியினர் பெர்த்தில் உள்ள பழைய வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். இரு பிரிவுகளாக விளையாடினர். 'பீல்டிங்' செய்த போது துவக்க வீரர் சுப்மன் கில்லின் இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. 'ஸ்கேன்' பரிசோதனையில் லேசான எலும்பு முறிவு உறுதியாக, முதல் டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.

ரோகித் 'நோ': மற்றொரு துவக்க வீரரான ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா செல்லவில்லை. இவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், மும்பையில் தங்கியுள்ளார். முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார். இவருக்கு பதில் கேப்டன் பொறுப்பை பும்ரா ஏற்பார். ரோகித், சுப்மன், இல்லாத நிலையில், பயிற்சியில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து தாக்கியதில் லோகேஷ் ராகுலும் காயம் (வலது முழங்கை) அடைய, சிக்கல் அதிகமானது.


தேறிய ராகுல்: இந்தச் சூழலில் நேற்று ராகுல் நம்பிக்கை தந்தார். மூன்று மணி நேரம் அசராமல் பயிற்சியில் ஈடுபட்டார். வழக்கமான உடற்பயிற்சிகளையும் செய்தார். முழங்கை பகுதியில் வலியை உணரவில்லை.


ராகுல் கூறுகையில்,''தற்போது நலமாக இருக்கிறேன். முதல் டெஸ்டில் களமிறங்க தயாராக உள்ளேன்,'' என்றார். துவக்கத்தில் ஜெய்ஸ்வால்-ராகுல் களமிறங்கலாம்.இந்திய அணியின் 'பிசியோதரபிஸ்ட்' கம்லேஷ் ஜெயின் கூறுகையில்,''ராகுலுக்கு காயம் ஏற்பட்டு, 48 மணி நேரம் முடிந்து விட்டது. எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. பெர்த் டெஸ்டில் களமிறங்கலாம்,''என்றார்.


துணை 'பிசியோதரபிஸ்ட்' யோகேஷ் பார்மர் கூறுகையில்,''எக்ஸ்-ரே', 'ஸ்கேன்' எடுக்க ராகுலை நான் தான் அழைத்துச் சென்றேன். மருத்துவ அறிக்கைப்படி நலமாக உள்ளார்,''என்றார்.
தேவ்தத் வாய்ப்பு
இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கல், வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார், கலீல் அகமது, நவ்தீப் செய்னி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''வலை பயிற்சியின் போது பும்ரா பந்துகளை தேவ்தத் படிக்கல் சிறப்பாக எதிர்கொண்டார். சுப்மன் கில்லுக்கு மாற்றாக இருப்பார். ஷமி இல்லாத நிலையில் மற்ற 'வேகங்களின்' உதவி தேவைப்படலாம்,''என்றார்.

அஷ்வினை சமாளிக்க...
இந்திய அணியின் அனுபவ 'ஆப்-ஸ்பின்னர்' அஷ்வின் வலையில் ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் தடுமாறுவது வழக்கம். இது குறித்து ஸ்மித் கூறுகையில்,''அஷ்வின் சிறந்த பவுலர். எதிரணி பேட்டரை வீழ்த்த வித்தியாசமான திட்டத்துடன் வருவார். இம்முறை ஆஸ்திரேலிய மண்ணில் 'ஆப்-ஸ்பின்' பந்தில் அவுட்டாக விரும்பவில்லை. அஷ்வினுக்கு எதிராக அசத்துவேன். அவரை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன்,''என்றார்.

கோலிக்கு இலக்கு

டெஸ்டில் இந்த ஆண்டு கோலி தடுமாறுகிறார். 6 போட்டிகளில் 250 ரன் (சராசரி 22.72) தான் எடுத்துள்ளார். ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் 13 டெஸ்டில் 1352 ரன் (சராசரி 54.08) குவித்துள்ளார். பெர்த் டெஸ்டில் ரோகித், சுப்மன் இல்லாத நிலையில், கோலி மீதான சுமை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் 'வேகப்புயல்' மெக்ராத் கூறுகையில்,''நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த சோகத்தில் இந்தியா உள்ளது. இதை பயன்படுத்தி, ஆஸ்திரேலிய அணியினர் நெருக்கடி கொடுக்க வேண்டும். துவக்க போட்டிகளில் கோலியை குறைந்த ஸ்கோரில் வெளியேற்றினால், அவருக்கு நெருக்கடி அதிகரிக்கும். உணர்ச்சிகரமான வீரர். இவருக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாட முயற்சித்தால், சிறப்பான பேட் செய்து பதிலடி கொடுத்துவிடுவார். இவரிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,''என்றார்.

Advertisement