இந்த வாரத்தில் வரும் புதிய பங்கு வெளியீடுகள்

இந்திய பங்குச் சந்தையில், இந்த வாரத்தில் ஐ.பி.ஓ., எனப்படும் புதிய பங்கு வெளியீடு வாயிலாக, மூன்று நிறுவனங்கள் முதலீட்டை திரட்ட இருக்கின்றன.

சந்தைகளின் சரிவுக்கு மத்தியில், ஐ.பி.ஓ.,க்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, செயல்திறன் ஆகியவை, வரும் ஆண்டுகளில், அதன் பாதையை தீர்மானிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் இதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி



புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத்துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி நிறுவனம், 10,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, நவ., 19ம் தேதி ஐ.பி.ஓ., வருகிறது.

நவ., 22 வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். 92.59 கோடி புதிய பங்குகளுக்கு, பங்கு ஒன்றின் விலை 108 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம் 138 பங்குகளை கேட்டு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு, 14,904 ரூபாய் முதலீடு தேவைப்படும். நவ., 25ம் தேதி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நவ., 27ம் தேதி சந்தையில் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.

லாமொசைக் இந்தியா



டைல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு,குறு, நடுத்தர பிரிவைச் சேர்ந்த லாமொசைக் இந்தியா நிறுவனம், 612 கோடி ரூபாய் முதலீடு திரட்ட, நவ., 21ம் தேதி பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. 30.60 லட்சம் புதிய பங்குகள் வெளியிடப்படுகிறது.

பங்கு ஒன்றின் விலை 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம் 600 பங்குகள் வரை கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கு, 1.20 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும். நவ., 29ம் தேதி, இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

சி டூ சி அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்



ராணுவ எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சி டூ சி அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம், 99.07 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, நவ., 22ம் தேதி, ஐ.பி.ஓ., வர உள்ளது. 43.84 லட்சம் புதிய பங்குகள் விற்பனைக்கு வருகிறது.

பங்கு ஒன்றின் விலை 214 -- 226 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம் 600 பங்குகள் முதல் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கு, 1,35,600 ரூபாய் தேவைப்படும். வரும் நவ., 29ம் தேதி இந்நிறுவன பங்குகள், சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

பொருளாதார நிச்சயமற்ற நிலையில், இதுபோன்ற ஐ.பி.ஓ.,க்கள் வருவது, சந்தையில் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை மதிப்பிடுவதற்கு உதவும். இவை வரவேற்பு பெறும்பட்சத்தில், அடுத்தடுத்து வரும் பங்கு வெளியீடுகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Advertisement