இஸ்ரேல் பிரதமரை குறிவைத்து பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறிவைத்து, அவரது வீட்டில் இரண்டு குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், ஓராண்டைக் கடந்தும் தொடர்கிறது.
இதேபோல், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி, மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள கேசராஸ் பகுதியில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதே வீட்டில் பயங்கரவாதிகள் நேற்று இரண்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த குண்டுகள், அந்த வீட்டின் தோட்டத்தில் விழுந்து வெடித்ததில், அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது.
தாக்குதலின்போது, நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த வீட்டில் இல்லை என கூறப்பட்டுஉள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக மூன்று பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறுகையில், 'பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
'இது, கண்டனத்துக்குரிய செயல். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹெஸ்பொல்லா அமைப்பின் செய்தி தொடர்பாளர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.