அபராதம் விதிப்பதில் மெத்தனம் வடிகாலில் அடைப்பு அதிகரிப்பு
சோழிங்கநல்லுார்,:இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. சென்னை மற்றும் புறநகரில் உள்ள, 62 ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இந்த மண்டலத்தில் உள்ள பகிங்ஹாம் கால்வாய் வழியாக முட்டுக்காடு கடலில் சேர்கிறது.
மொத்த வெள்ளமும் இந்த வழியே செல்வதால், வடிகால்களில் எளிதில் அடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால், குப்பை கையாளும் முறையை மாற்றம் செய்ய, , மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது. ஆனால், மரக்கழிவுகள், பிளாஸ்டிக் குப்பையை முறையாக கையாளுவதில்லை என்ற புகார் எழுகிறது. கழிவுநீரை சாலையில் விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
குப்பை, கழிவுநீர் கையாளாத நபர்கள், நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதோடு, இதற்காக, வார்டு பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு, அபராதம் விதிக்கும் கருவி வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 15 நாட்களில், துப்புரவு ஆய்வாளர்கள், 4 லட்சம் ரூபாய், சுகாதார ஆய்வாளர்கள், விதி மீறல்களில் ஈடுபட்டோர் மீது, 2.15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். ஆனால், வடிகால், கால்வாய்களை கண்காணிக்கும் வார்டு பொறியாளர்கள் அதிக அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், ஒரு லட்சம் ரூபாய் தான் அபராதம் விதித்துள்ளனர்.
இதனால், வடிகால், கால்வாய்களில் அடைப்பு அதிகரித்து, குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. மழைக்காலம் முடியும் வரை, குப்பை, கழிவுநீரில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.