தேசிய நெடுஞ்சாலை நடுவே தேங்கிய மழைநீரால் அபாயம்

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை, ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், 18 இடங்களில் சிறுபாலங்கள், மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.

ஸ்ரீபெரும்புதுார் முதல் காரப்பேட்டை வரை, 34 கி.மீ., துார சாலை, 2019ம் ஆண்டு துவங்கி, நடப்பாண்டின் டிசம்பர் மாத இறுதியில் பணிகள் முடிக்க வேண்டும்.

சின்னையன்சத்திரம், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மேம்பாலம் கட்டுவதற்கு மாற்று பாதை அமைத்து விட்டு, மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், வாகனங்கள் ஏறி இறங்குவதற்கு ஏற்ப, சாய்தள வசதி ஏற்படுத்தவில்லை.

மேம்பாலத்திற்கு விடப்பட்ட இடைவெளியில், மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக, காரப்பேட்டை, வேடல் ஆகிய பகுதிகளின் சாலை நடுவே, முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி இருப்பதால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

எனவே, சாலை நடுவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement