சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீர் தொடர்ந்து பயன்படுத்த கோரிக்கை

குன்றத்துார்:சென்னை அருகே குன்றத்துார் அடுத்த சிக்கராயபுரத்தில், 23 கல்குவாரிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 300 முதல் 400 அடி ஆழம் கொண்டது. இதில் 1 டி.எம்.சி., வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

கடந்த 2017 ல் செம்பரம்பாக்கம் ஏரி வறட்சியை சந்தித்தபோது, இந்த கல்குவாரி நீர், சென்னை மக்களுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டது.

இதற்காக குவாரியில் இருந்து செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டது.

குவாரியில் நீரை உறிஞ்சி எடுக்க மிதவை மோட்டார் பொருத்தப்பட்டது. இதன் வாயிலாக, நாளொன்றுக்கு மூன்று கோடி லிட்டர் நீர், குவாரியில் இருந்து எடுக்கப்பட்டது.

அதன்பிறகு ஆண்டுதோறும் மழை அதிகம் பெய்ததால், இந்த குவாரியில் இருந்து தண்ணீர் எடுப்பதை குடிநீர் வடிகால் வாரியத்தினர் நிறுத்திவிட்டனர்.

இந்த 23 கல்குவாரிகளையும் ஒருங்கிணைத்து நீர்தேக்கமாக மாற்ற, அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. மேலும், பூந்தமல்லி, நசரத்பேட்டை, மேப்பூர், மலையம்பாக்கம், மாங்காடு பகுதியில் தேங்கும் வெள்ள நீர், கல்குவாரிக்கு வரும் வகையில், வெளிவட்ட சாலையோரம் புதிய கால்வாயும் அமைக்கப்பட்டது.

இந்த வழியே மழைக்காலத்தில் வெள்ள நீர் அதிகம் வந்ததால், சிக்கராயபுரம் குவாரிகள் முழு கொள்ளளவுடன் ஆண்டு முழுவதும் நிரம்பி காணப்படுகின்றன.

இதனால், மழைக்காலத்தில் குவாரி நிரம்பி, அருகே உள்ள கொல்லச்சேரி குடியிருப்பு பகுதியை சூழும் ஆபத்து உள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தினமும் சென்னைக்கு குடிநீர் எடுப்பதைப்போல், இந்த குவாரியில் இருந்தும் தண்ணீர் எடுத்தால் குவாரிகளில் உள்ள தண்ணீர் குறையும். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் குறைவதையும் தடுக்க முடியும்.

எனவே, குவாரி நீரை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Advertisement