புறநகர் பகுதியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

மறைமலை நகர்:செங்கை புறநகரில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கை புறநகர் பகுதிகளான மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், சமீப காலமாக குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோவில்கள், ரயில்வே கேட், சாலை சிக்னல்கள் போன்ற இடங்களில், வடமாநில பெண்கள் ஒரு தட்டில் சாமி சிலைகளை வைத்து பிச்சை எடுக்கின்றனர்.

குழந்தைகள் தங்களின் கைகளில், கீ செயின், ஸ்டிக்கர் போன்ற பொருட்களை வாங்க வற்புறுத்தி, வாகன ஓட்டிகளை கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

இதற்காக, 4 வயது முதல் 13 வயது குழந்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள், போக்குவரத்து நெரிசலில் வாகனங்களுக்கு இடையே புகுந்து பிச்சையெடுப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இவ்வாறு பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்கு, பொதுமக்கள் தின்பண்டங்கள் கொடுக்கும் போது, அதை வாங்கும் குழந்தைகளை, அவர்களை அழைத்து வந்த பெண்கள் அடிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் போக்குவரத்து சிக்னல்களில் பிச்சையெடுத்த மக்களை, அரசு தடுத்து கட்டுப்படுத்தியது. அங்கிருந்து வெளியேறியவர்கள், புறநகரான வண்டலுார், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு, குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர்.

இவர்கள், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் சென்று பிச்சை எடுத்து வருகின்றனர்.

சாலைகளில் சுற்றித்திரியும் பச்சிளம் குழந்தைகளை பார்க்கும் போது, அவர்கள் எதிர்காலத்தை நினைத்து கவலையாக உள்ளது. இது போன்ற குழந்தைகள், சமூக விரோதிகள் கட்டுப்பாட்டில் உள்ளனரா என்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது. சமூக நலத்துறை அதிகாரிகள், இவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நல குழும அதிகாரிகள் கூறியதாவது:

சாலைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் குறித்த புகார்களுக்கு, 1098 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மீட்கப்பட்டும் பெற்றோர் இல்லாத குழந்தைகள், காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்கள் கல்வி கற்க வழி செய்யப்படுகிறது. இதற்காக, ஒரு குழந்தைக்கு, மாதம் 4,000 ரூபாய் வரை அரசு செலவு செய்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு அரசு அரசு நிதி உதவிபெறும் இல்லங்களும், 42 தனியார் காப்பகங்களும் உள்ளன. பெற்றோர்களுக்கும் முறையாக கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கை மாவட்டத்தில், வெளிமாநிலங்களை சேர்ந்த குழந்தைகளே, பிச்சை எடுக்கும் போது அதிக அளவில் மீட்கப்பட்டுகின்றனர். குழந்தைகள் நலனுக்காக, பெற்றோர்களை வீட்டு குழந்தைகள் பிரியக்கூடாது என்ற எண்ணத்தையும் கொண்டு செயல்பட வேண்டிய சூழல் உள்ளது.

பெற்றோர்களிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு, சொந்த ஊர்களுக்கு பயணச்சீட்டு எடுத்து கொடுத்து, அவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கின்றோம்.

கடந்த மாதம் மட்டும் கல்பாக்கம், கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து, 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மீட்கப்படும் குழந்தைகளுக்கு பராமரிப்பு, பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை, குழந்தைகள் நல குழுமம் உறுதி செய்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழந்தைகளை வைத்து, போக்குவரத்து சிக்னல், பேருந்துகளில் பிச்சை எடுப்போர், பயணியரிடம் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல, இந்த குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்தால் வாங்குவதில்லை. பணம் மட்டுமே கேட்கின்றனர். தின்பண்டங்கள் வாங்கும் குழந்தைகளை, அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்கள் அடித்து, தின்பண்டங்கள் வாங்கக்கூடாது என கண்டிக்கின்றனர். இந்த அவல நிலையை போக்க, உடனடி நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

- த.இளங்கோவன்,

செங்கல்பட்டு.

Advertisement