ஆக்கிரமிப்பு அகற்றப்படாமலேயே கூடல்நகர் ரோடு விரிவாக்கப்பணி

மதுரை : மதுரை கூடல்நகர் ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்றாதவரை விரிவாக்கப் பணிகளால் பயனில்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

மதுரை கூடல்நகர் - அலங்காநல்லுார் ரோடு விரிவாக்கப் பணிகள் சில மாதங்களாக நடக்கிறது. இந்த ரோடு ரயில்வே மேம்பாலம் முதல் சிக்கந்தர் சாவடி வரை 2 கி.மீ., தொலைவுக்கு ஆக்கிரமிப்புடன் இருந்ததால் பயணிகள், பாதசாரிகள், வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன.

இதற்கிடையே பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் பதிப்பு, கேபிள் பதிப்பு என ரோட்டை பல்வேறு பணிகளுக்காக கொத்திக் குதறினர். இதனால் பள்ளம், மேடாக காட்சியளித்த சாலையில் பயணிப்போர் அவதிப்பட்டனர். விபத்துகள் அடிக்கடி நடந்தன. பத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின.

இதையடுத்து நான்கு வழிச்சாலைக்கு நிகராக இந்த ரோடு விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இரவு, பகல் பாராமல் நடந்த பணிகளிடையே ரோட்டோர மின்கம்பங்கள் அகற்றப்பட்டும், மின்மாற்றிகள் அமைக்கப்பட்டும் சாலை புதுப்பொலிவு பெற்றது. இருப்பினும் இப்பகுதி மக்களிடம் திருப்தி ஏற்படவில்லை. வழக்கமான ஆக்கிரமிப்புகள் மீண்டும் தொடர்வதே அதற்கு காரணம். ரோட்டோரம் இருந்த உணவகங்கள், பழக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உட்பட பலவும் மீண்டும் ஆக்கிரமிப்பை அரங்கேற்றி இருக்கின்றன. அவற்றை அகற்றப்படாதவரை ரோட்டை விரிவுபடுத்தி எந்தப்பலனுமில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த ரோட்டில் திங்கள் கிழமைகளில் வாரச்சந்தையும் நடைபெறுவதால் நெரிசலை விளக்கத் தேவையில்லை.

மாநகராட்சி, நெடுஞ்சாலை, போலீஸ் துறையினர் இணைந்து இதற்கான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

Advertisement