அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க...புதுமுயற்சி!: தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
திருவாலங்காடு:அரசு பள்ளிகளில், நடந்து முடிந்த முதல் பருவ தேர்வு, காலாண்டு தேர்வுகளில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி கொடுத்து, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, திருவள்ளூர் மாவட்ட கல்வித் துறையினர் புதுமுயற்சி எடுத்து உள்ளனர். வாரத்தில் ஐந்து நாட்கள் முக்கிய வினாக்கள் கொடுத்து, அன்றே மாதிரி தேர்வும் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 138 உயர்நிலை, 126 மேல்நிலை என, மொத்தம் 264 பள்ளிகள் உள்ளன. கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் 91.32. மாநில அளவில், திருவள்ளூர் மாவட்டம், 36வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த, 2023ல் தேர்ச்சி சதவீதம் 92.47 ஆகவும், மாநில அளவில் 27வது இடத்தில் இருந்தது. அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் 84.70 சதவீதம் மட்டுமே.
அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் 86.52. இது, கடந்த 2023ல் பெற்ற, 88.80 சதவீதத்தை விட, 2.28 சதவீதம் குறைவு. அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய, 3,293 பேர் தேர்ச்சி பெறவில்லை. மேலும், மாநில அளவிலும், 35ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா காலத்திற்குப் பின், பிளஸ் 2 தேர்வில், 2022ல்-93.60, 2023ல்-92.47, 2024ல்-91.32 என, தேர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வில், 2022ல்- 88.97, 2023ல்-88.80, 2024ல்-86.52 எனவும், தேர்ச்சி விகிதம் சரிந்து கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கலெக்டர் பிரபுசங்கர், அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பல்வேறு ஆலோசனை வழங்கியும், தேர்ச்சி விகிதம் கடும் சரிவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடப்பாண்டு, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிளஸ் 2 தேர்வும் எழுத உள்ளனர். இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதம் குறையாத வகையில், காலாண்டு தேர்வு முடிவை வைத்து கலெக்டர் பிரபுசங்கர் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், காலாண்டு தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவிற்கான காரணம் குறித்து கேட்டறிந்து, பள்ளி இறுதி தேர்வில் அதிக தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
'அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு காரணம், சில ஆசிரியர்கள் மாணவர்களை கண்டு கொள்ளாததே. தேர்வு நேரத்தில் முறையாக படிக்காதது மற்றும் மாதிரி தேர்வு எழுதாததால் தான், மாணவர்கள் தோல்வி அடைகின்றனர்' என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்து வந்தாலும், அதிகளவில் மாணவர்கள் தோல்வி அடைவது கவலையை அளிக்கிறது. இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி , இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் புதுமுயற்சி எடுத்து உள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'வாகை சூடுவோம்' திட்டம் வாயிலாக 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமித்து, தேர்வுக்கு வரும் முக்கிய வினாக்கள் கொடுத்து, அவற்றை காலை நேரத்தில் படித்து, மாலை நேரத்தில் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.
காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற ஏதுவாக, 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளிக்கும் படியான ‛கீ பாய்ன்ட்' என கூறப்படும் முறையை கற்றுத் தருகிறோம்.
வாரத்தில் ஐந்து நாட்களிலும், முக்கிய வினாக்கள் கொடுத்து, அன்றே மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நடவடிக்கையால் வரும் பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.