புயலில் சேதமான அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

பொன்னேரி:பொன்னேரி அடுத்த தத்தமஞ்சி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 80 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 'மிக்ஜாம்' புயல் மழையின்போது, பள்ளியின் சுற்று சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

ஓராண்டு ஆன நிலையில், இதுவரை விழுந்த சுவர்களின் கட்டுமானங்கள் அகற்றப்படாமலும், அங்கு புதியதாக அமைக்கப்படாமலும் உள்ளது. சுற்று சுவர் உடைந்து பகுதியின் அருகே, சிறிய குட்டை ஒன்று உள்ளது.

தற்போது அதில் தண்ணீர் இருக்கும் சூழலில், பள்ளி மாணவர்கள் விளையாட்டு நேரங்களில் இப்பகுதிக்கு வரும்போது அசம்பாவிதங்களில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும், சுற்று சுவர் இல்லாத நிலையில், விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களிலும் வெளி நபர்கள் பள்ளி வளாகத்தை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

பள்ளி மாணவர்கள் நலன்கருதி, இடிந்து விழுந்த மேற்கண்ட பள்ளியின் சுற்று சுவரை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement