ரெட்டேரி மேம்பாட்டு பணி மீண்டும் தாமதம்

மாதவரம்:மாதவரம் மண்டலத்தில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகவும் உதவும் ரெட்டேரியை, சுற்றுலா தலமாக மேம்படுத்த, 2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2015 மார்ச்சில் பணிகள் துவங்கின. இதில் கரைகள் அமைக்கும் பணி மட்டுமே நடந்தன.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, நீர்வள ஆதாரத்துறை வாயிலாக, ரெட்டேரியை மேம்படுத்தும் பணிக்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பரில் மீண்டும் பணிகள் துவங்கின. ஓராண்டில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

லட்சுமிபுரம் மற்றும் எம்ஜிஆர் நகர் கரையோரப்பகுதிகள் உயர்த்தப்பட்டுள்ளன. எம்ஜிஆர் நகரில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அப்பகுதியில் ஏரி விரிவாக்கம் பெற்றுள்ளது. ஏரியை ஆழப்படுத்தி, ஏரிக்கரையில் இருந்து 11 லட்சம் கனமீட்டர் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது. இதனால் நீர் சேமிப்பு 45 - 50 மில்லியன் கன அடி வரை உயர்ந்துள்ளது. இதற்கு முன் கொள்ளளவு, 32 மில்லியன் கன அடியாக இருந்தது.

பறவைகள் வந்து செல்ல செயற்கை தீவு உருவாக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. படகு சவாரிக்கு தேவையான பணிகளை மட்டுமே முடிக்க வேண்டியுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரெட்டேரி மேம்படுத்தும் பணி 2025ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளனர்.

நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மழை காரணமாக பணிகளை அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளோம். முற்றிலும் பணிகள் முடியும் போது, புழல் ஏரிக்கு அடுத்து பெரிய நீர்ஆதாரமாக ரெட்டேரி விளங்கும். சுற்றுலா தலமாகவும் காட்சி அளிக்கும்' என்றார்.

Advertisement