வி.எச்.பி., முன்னாள் துணை தலைவருக்கு 'சம்மன்'
சென்னை: சென்னை தி.நகரில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த நிகழ்ச்சியில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணை தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன், 76, பேசுகையில், அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் குறித்து, அவதுாறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சென்னை மாம்பலம் போலீசில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் செல்வம் அளித்த புகாரின்படி, இந்திய தண்டனை சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய எட்டு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு செப்., 14ல் மணியனை கைது செய்தனர். பின், ஜாமின் பெற்றார். இந்த வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர், 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையை, கடந்த மாதம் 1ம் தேதி தாக்கல் செய்தார்.
அதை ஏற்ற, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், மணியனுக்கு, 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு தள்ளி வைத்தார்.