அருங்குளம் இருளர் காலனியில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் இருளர் காலனியில், 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வசதியாக ஊராட்சி நிர்வாகம் 2020-21ல் ஒருங்கிணைந்த பொது கழிப்பறை, 5.25 லட்சம் ரூபாயில் ஏற்படுத்தியது.
இதற்கு புதிய ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கழிவறைக்கு மின்இணைப்பு இல்லாததால், கடந்த மூன்று ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.
தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் கழிவறை கட்டடம் சுற்றியும் செடிகள் வளர்ந்துள்ளன. கழிவறையை திறந்து பயன்பாட்டிற்கு விடாமல் உள்ளதால், அரசு பணம் வீணாவதுடன் இருளர் குடும்ப பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம், ஒருங்கிணைந்த பொது கழிப்பறைக்கு மின்இணைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.