ரோப் கார் சேவைக்கு அரசு அனுமதி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அத்தியாவசிய பூஜை பொருட்களை கொண்டு செல்லவும், அவசர காலங்களில் பயன்படுத்தவும் பம்பை -- சன்னிதானம் இடையே, 250 கோடி ரூபாயில் ரோப் கார் அமைக்க, கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தேவைப்படும் பூஜை பொருட்களை தலைச்சுமையாகவும், டோலியிலும், கழுதைகள் வாயிலாகவும் கொண்டு செல்லும் பழக்கம் இருந்தது.

அதற்கு முடிவு கட்ட பம்பை --- சன்னிதானம் இடையே, 250 கோடி ரூபாய் செலவில் ரோப் கார் அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.

ஆனால், வயநாடு இடைத்தேர்தல் வந்ததால் செயல்படுத்த முடியவில்லை. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் ரோப்கார் அமைக்கும் பணிகளை துவக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகையில், 'திருத்திய மதிப்பீட்டின் படி ரோப் கார் அமைக்க உத்தேசித்திருந்த ஏழு தாங்கு பில்லர்களுக்கு பதில், தற்போது ஐந்து பில்லர்கள் மட்டும் அமைக்கவும், ரோப் கார் பாதையில் வெட்ட முடிவு செய்திருந்த, 300 மரங்களுக்கு பதில் தற்போது 80 மரங்களை மட்டும் வெட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

'மொத்தம், 2.7 கி.மீ. துாரத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்த ரோப் கார் சேவையால், பம்பையில் இருந்து சன்னிதானத்தை 10 நிமிடங்களில் அடைந்து விடலாம்.

'சன்னிதானத்திற்கு தேவையான அத்தியாவசிய பூஜை பொருட்களை கொண்டு செல்லவும், அவசர காலங்களில் பக்தர்களை சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு அழைத்து வரவும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு உற்ஸவ காலத்திலேயே இந்த பணிகள் துவங்கும்' என்றனர்.

Advertisement