ரூ.96.8 லட்சம் ஆன்லைன் பண மோசடியில் மேலும் 2 பேர் கைது; ரூ. 3.25 லட்சம் பறிமுதல்
மதுரை : மதுரை வழக்கறிஞரிடம் சர்வதேச பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் செய்து சம்பாதிக்கலாம் எனஆசை வார்த்தை கூறி ரூ.96.8 லட்சம் மோசடி வழக்கில், மதுரையை சேர்ந்த மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மதுரை அலங்காநல்லுார் வழக்கறிஞரிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஒரு கும்பல் ரூ.பல லட்சம் மோசடியில் ஈடுபட்டது.
இதுதொடர்பாக துபாயில் இருந்து மூளையாக செயல்பட்ட இருவரின் கூட்டாளிகள் தஞ்சை, திருச்சியை சேர்ந்த 6 பேரை தனிப்படை போலீசார் கைது ஏற்கனவே செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி மோசடியில் தொடர்புடைய மதுரை தெற்குவாசல் சுல்தான் அப்துல்காதர், மேலுார் அப்துல் ரஹ்மான் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அலைபேசிகள், சிம்கார்டுகள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், ஏ.டி.எம்., கார்டுகள், பணம் எண்ணும் இயந்திரங்கள், ரொக்கம் ரூ.3.25 லட்சம் கைப்பற்றப்பட்டன. இவர்கள் பல வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி ஏமாற்றி பெறும் பணத்தை ஏ.டி.எம்., மூலம் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை ரூ. பல கோடி பணப் பரிமாற்றம் செய்து ஒரு லட்சத்திற்கு ரூ.500 கமிஷன் வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசாரை எஸ்.பி.,அரவிந்த் பாராட்டினார்.