நான்கு வழி சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் விபத்து அச்சம்

1

திருப்பாச்சேத்தி ; மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு வருகின்றன.


மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு இப்பாதையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு திருப்பாச்சேத்தி, போகலூர் ஆகிய இரு இடங்களில் சுங்ககட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினசரி இப்பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.


மதுரையில் இருந்து கமுதி, ராமநாதபுரம், ஏர்வாடி, ராமேஸ்வரம், சாயல்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு தினசரி காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை லாரி, வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.

நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் பழுதடைந்து நின்றால் அவற்றை சாலையின் ஓரத்திற்கு அப்புறப்படுத்த மீட்பு வாகனமும் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் முதல் நான்கு வழிச்சாலையின் மூன்று இடங்களில் மீட்பு வாகனம். ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டாலும் அவசர கால சமயங்களில் வாகனங்கள் வருவதில்லை என டிரைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று காலை மதுரையில் இருந்து பாம்பன் பகுதிக்கு காய்கறிகள், பழங்கள் ஏற்றி சென்ற லாரி திருப்பாச்சேத்தி பைபாசில் டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்று விட்டது. வாகனத்தில் டிரைவருடன் பெண்கள் மட்டுமே இருந்தனர்.

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடிக்கு தகவல் கொடுத்தும் யாரும் வரவில்லை. வேறு வழியின்றி டிரைவர் மட்டும் டயரை கழட்டி மாற்ற தொடங்கினார்.

இதே போன்று கீழடி விலக்கில் காய்கறி ஏற்றி வந்த வேன் பழுதாகி நின்ற போது பின்னால் வந்த அரசு பஸ் மோதி விபத்திற்குள்ளானது.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. எனவே நான்கு வழிச்சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும், பழுதாகி நிற்கும் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்ள பிரதிபலிக்கும் ஒளியுடன்கூடிய முக்கோண டிவைடரை பயன்படுத்தாமல் வண்டியில் கொண்டு வந்த காய்கறி மூடைகள் அருகில் இருந்து பெரிய கற்கள், செடிகளை பயன்படுத்துகின்றனர்.

வாகனங்களை சரி செய்த பின் கற்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். எனவே நான்கு வழிச்சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement